தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கம்பளத்து மாவீரர்கள் தோளோடு தோள்நின்று விடுதலை நெருப்பை மூட்டிய மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்! • பீஷ்மரின் உறுதிமொழி: வாக்கைக் காப்பதா, அறத்தைக் காப்பதா? • ஒரு தலைவரின் வரலாறும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தோற்றமும் • ஆன்மநேய சேவை விருது பெற்ற சி. முத்துசாமி தம்பதியருக்கு வாழ்த்து! • கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க. துணைத் தலைவராக திரு. ஜி. தர்மபிரகாஷ் நியமனம் • கம்பளத்து மாவீரர்கள் தோளோடு தோள்நின்று விடுதலை நெருப்பை மூட்டிய மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்! • பீஷ்மரின் உறுதிமொழி: வாக்கைக் காப்பதா, அறத்தைக் காப்பதா? • ஒரு தலைவரின் வரலாறும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தோற்றமும் • ஆன்மநேய சேவை விருது பெற்ற சி. முத்துசாமி தம்பதியருக்கு வாழ்த்து! • கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க. துணைத் தலைவராக திரு. ஜி. தர்மபிரகாஷ் நியமனம்
விளம்பரங்கள்
கம்பளத்து மாவீரர்கள் தோளோடு தோள்நின்று விடுதலை நெருப்பை மூட்டிய மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்!

கம்பளத்து மாவீரர்கள் தோளோடு தோள்நின்று விடுதலை நெருப்பை மூட்டிய மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்!

Admin 24 Oct 2026 | 12:31 PM
பகிர்:

மருது சகோதரர்களின் 225 ஆவது நினைவு நாளில் என் வீர வணக்கம் … 24.10.2026

பாஞ்சாலங்குறிச்சியும், விருப்பாச்சியும், சிவகங்கை சீமையும் விடுதலைப் போரில் இணைந்த வரலாறு 

 வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த மண்ணின் வீரமும், கோபால் நாயக்கர் உலவிய விருப்பாச்சியின் ஈரமும், மருது சகோதரர்கள் வாழ்ந்த சிவகங்கை சீமையின் தீரமும் ஒன்றிணைந்த வரலாற்றை உங்கள் முன்னால் வடிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் 

வீரம் நிறைந்த தமிழ்நாட்டு மண்ணில், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக விடுதலைத் தீயை மூட்டிய வீரர்களின் வரலாற்றை நினைவுகூரும் இந்தப் புனிதமான நாளில், மருது சகோதரர்களின் தியாகத்தையும், அவர்கள் மற்ற விடுதலைப் போராட்ட வீரர்களுடன் கொண்டிருந்த தொடர்புகளையும் எடுத்துரைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மதிப்பிற்குரிய பெரியோர்களே! தாய்மார்களே! வரலாற்றின் மீது பற்றுக்கொண்ட என் அன்பு உறவுகளே! நண்பர்களே! வீர இளைஞர்களே! அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்!

ஒரு மனிதனின் வீரம் அவன் தனியாகப் போராடுவதில் மட்டும் இல்லை. தன்னுடைய மண்ணின் விடுதலைக்காகப் போராடும் மற்ற வீரர்களையும் அரவணைத்து, அவர்களோடு கைகோத்து, எதிரியின் வலிமையை எதிர்கொள்வதில்தான் உண்மையான வீரத்தின் பெருமை அடங்கியிருக்கிறது.

அந்த வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எழுந்த வீரர்களை ஒருங்கிணைத்து, விடுதலைப் போராட்டத்திற்கு வலிமை சேர்த்த பெருமை மருது சகோதரர்களுக்கு உண்டு.

வீரமங்கை வேலுநாச்சியார், விருப்பாச்சி கோபால் நாயக்கர், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோருடன் தொடர்புடைய இந்த வரலாற்றுச் சம்பவங்கள், நமது விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான அத்தியாயங்களாகும்.இன்று அந்த வீர வரலாற்றை நினைவுகூர்வோம்! 

வீரமங்கை வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும்! 

சிவகங்கைச் சீமையின் அரசியாக விளங்கிய வீரமங்கை வேலுநாச்சியார், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்த வீரப் பெண்மணி!

சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதத் தேவர் 1772ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பின்னர், வீரமங்கை வேலுநாச்சியார் தனது மகள் வெள்ளச்சி நாச்சியாருடன் வெளியேறி, திண்டுக்கல் அருகிலுள்ள விருப்பாட்சியில் சுமார் எட்டு ஆண்டுகள் பாதுகாப்புடன் தங்கியிருந்தார். 

“சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதத் தேவர் உயிரிழந்தபோது, தனது நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் வெளியேறிய வீரமங்கை வேலுநாச்சியாருக்கு, விருப்பாட்சி கோபால் நாயக்கர் அடைக்கலமும் பாதுகாப்பும் வழங்கினார். 

தனது மகளைப் போன்று அவரை அரவணைத்து ஆதரித்தார் என்று போற்றப்படும் கோபால் நாயக்கரின் உதவியுடன், வேலுநாச்சியார் சுமார் எட்டு ஆண்டுகள் படை திரட்டியும் கூட்டணிகளை உருவாக்கியும், 1780ஆம் ஆண்டு சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்தார். 

அந்தப் பயணத்தில் அவருக்குத் துணையாக நின்றவர்கள்தான் பெரிய மருதுவும் சின்ன மருதுவும்! 

அந்தக் காலகட்டத்தில், ஆங்கிலேயர்களின் எதிர்ப்பைச் சமாளிக்கத் தேவையான படை வலிமையையும் ஆதரவையும் திரட்டுவது மிகப்பெரிய சவாலாக இருந்தது.

அந்தச் சூழலில், சிவகங்கைச் சீமையை விட்டு வெளியேறிய வேலுநாச்சியாருக்கும் மருது சகோதரர்களுக்கும் விருப்பாட்சி பாளையத்தின் ஆட்சியாளரான கோபால் நாயக்கர் அடைக்கலமும் ஆதரவும் அளித்தார். 

அங்கு தங்கியிருந்த காலத்தில் வேலுநாச்சியார் தனது படை வலிமையைப் பெருக்கி, ஆங்கிலேயர்களுக்கு எதிரான போருக்குத் தயாரானார்.

ஹைதர் அலி உள்ளிட்டோரின் உதவியையும் பெற்ற வேலுநாச்சியார், மருது சகோதரர்களின் படைத் துணையுடன் சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்தார்.

இந்த வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி என்ன தெரியுமா?

ஒரு நாட்டின் விடுதலைக்காகப் போராடும்போது, தனிப்பட்ட வீரத்தைவிடக் கூட்டணியின் வலிமை முக்கியமானது என்பதைத்தான்!

வேலுநாச்சியாரின் உறுதியும், மருது சகோதரர்களின் போர்த்திறனும், கோபால் நாயக்கரின் ஆதரவும் இணைந்தபோது, ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு வலிமை கிடைத்தது.

இந்த வரலாற்றுத் தொடர்பு, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் ஒற்றுமை எவ்வளவு முக்கியமானது என்பதை நமக்கு உணர்த்துகிறது. 

 விருப்பாட்சி கோபால் நாயக்கரும் மருது சகோதரர்களும்! 

திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த விருப்பாட்சி கோபால் நாயக்கர், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய முக்கியமான பாளையக்காரர்களில் ஒருவர்.

அவர் வெறும் உள்ளூர் ஆட்சியாளராக மட்டும் செயல்படவில்லை. ஆங்கிலேயர்களை எதிர்க்கும் பல்வேறு தலைவர்களையும் ஒன்றிணைத்து, பரந்த அளவிலான எதிர்ப்பை உருவாக்க முயன்றார்.

சிவகங்கை மருது சகோதரர்களுக்கும் கோபால் நாயக்கருக்கும் இடையிலான தொடர்பு, இந்தப் போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் பெறுகிறது.

வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்டெடுப்பதற்காகப் போராடிய காலத்தில், கோபால் நாயக்கர் அவருக்கும் மருது சகோதரர்களுக்கும் ஆதரவளித்தார். பின்னர், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தைப் பரந்த அளவில் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை ஏற்பட்டபோதும், இந்தத் தலைவர்களின் தொடர்பு முக்கியத்துவம் பெற்றது.

குறிப்பாக, 1800–1801 காலகட்டத்தில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட முயன்றனர்.

1800 ஏப்ரலில் விருப்பாட்சியில் நடைபெற்ற கூட்டத்தில்   ஆங்கிலேயர்களுக்கு எதிரான எதிர்ப்புக் கூட்டமைப்பு கிளர்ச்சியைத் தூண்ட திட்டமிட்டதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்தக் கூட்டமைப்பில் மைசூர், மலபார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொடர்புபட்டிருந்தனர்.

அதாவது, சிவகங்கையில் எழுந்த எதிர்ப்பும் திண்டுக்கல் பகுதியில் எழுந்த எதிர்ப்பும் தனித்தனியாகச் செயல்படாமல், ஆங்கிலேயர்களின் படை வலிமையை எதிர்கொள்ளப் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் போராட்டத்தை முன்னெடுக்க முயன்றன.

இதன் மூலம் ஆங்கிலேயர்களின் படைகளை வெவ்வேறு பகுதிகளில் எதிர்கொள்ள முடியும் என்று அவர்கள் கருதினர்.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான உண்மை என்னவென்றால், மருது சகோதரர்கள் தங்கள் மண்ணின் விடுதலையை மட்டும் சிந்திக்கவில்லை; மற்ற பகுதிகளில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய தலைவர்களுடனும் இணைந்து செயல்பட முயன்றனர் என்பதுதான்!

அந்த ஒற்றுமையின் அடையாளமாகவே விருப்பாட்சி கோபால் நாயக்கருக்கும் மருது சகோதரர்களுக்கும் இடையிலான தொடர்பை நாம் பார்க்க வேண்டும்.  

வீரபாண்டிய கட்டபொம்மனும் மருது சகோதரர்களும்! 

தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயரை உச்சரிக்கும்போதே நமது உள்ளத்தில் வீரம் பிறக்கிறது!

பாஞ்சாலங்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயர்களின் வரிவசூல் மற்றும் ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிவுடன் நின்றார்.

1799ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுடனான போர் தீவிரமடைந்தது. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை தாக்கப்பட்டது. இறுதியில் கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு, 1799 அக்டோபர் 16ஆம் தேதி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.

ஆனால், ஒரு வீரனின் உயிரைப் பறித்துவிட்டால் அவனுடைய கொள்கையையும் அழித்துவிடலாம் என்று ஆங்கிலேயர்கள் நினைத்திருந்தால், அது மிகப்பெரிய தவறு!

கட்டபொம்மனின் வீர உணர்வு அவரது சகோதரர் ஊமைத்துரை உள்ளிட்டவர்களின் வழியாகத் தொடர்ந்து வெளிப்பட்டது.

கட்டபொம்மனுக்கும் மருது சகோதரர்களுக்கும் இடையே ஆங்கிலேயர்களுக்கு எதிரான அரசியல் மற்றும் போராட்டத் தொடர்புகள் இருந்ததாக வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. 

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின்னர், அவரது சகோதரர் ஊமைத்துரை ஆங்கிலேயர்களுக்கு எதிராக மீண்டும் போராடுவதில் முக்கியப் பங்கு வகித்தார். 

அந்தக் கட்டத்தில் மருது சகோதரர்களின் ஆதரவு அவருக்குப் பெரும் வலிமையாக அமைந்தது.

கட்டபொம்மன் ஒரு வீர வரலாற்றை உருவாக்கினார்; 

அந்த வீர வரலாற்றின் தொடர்ச்சியாக ஊமைத்துரையும் மருது சகோதரர்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தனர்!

இதுவே பாஞ்சாலங்குறிச்சிக்கும் சிவகங்கைச் சீமைக்கும் இடையிலான தொடர்பின் வரலாற்றுச் சிறப்பு! 

 ஊமைத்துரையும் மருது சகோதரர்களும் — விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் திருப்பம்! 

மருது சகோதரர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஊமைத்துரைக்கு அளித்த ஆதரவு மிகவும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின்னர், அவரது சகோதரர் ஊமைத்துரை ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், சிறைக்கம்பிகள் வீரத்தை அடைத்துவிட முடியுமா?

1801 பிப்ரவரி 2 அன்று ஊமைத்துரையும் அவரது சகோதரர் சுப்பா நாயக்கர் என்ற சிவத்தையாவும் சிறைவாசத்தை உடைத்துக்கொண்டு பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தனர்.

ஆங்கிலேயர்களால் தரைமட்டமாக்கப்பட்டிருந்த கோட்டையை மீண்டும் கட்டுவதற்காக மக்களையும் வீரர்களையும் திரட்டினார்.

வெறும் ஆறு நாட்களில் கோட்டையை மீண்டும் கோட்டையைக் கட்டினர்.

இதனால் ஆங்கிலேயர்கள் மீண்டும் அந்தப் பகுதியின் மீது படையெடுத்தனர்.

பாஞ்சாலங்குறிச்சியில் ஆங்கிலேயர்களின் தாக்குதல் தீவிரமடைந்தபோது, ஊமைத்துரை உள்ளிட்ட போராளிகள் சிவகங்கைச் சீமையை நோக்கிச் சென்றனர்.

அதன்பிறகு ஊமைத்துரை கமுதிப் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்து சின்ன மருது அவரைச் சிறுவயலுக்கு அழைத்துச் சென்றார்.

மருது சகோதரர்கள் ஊமைத்துரைக்கு அடைக்கலம் அளித்ததோடு நிற்கவில்லை. 

அவர் மீண்டும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடுவதற்கும் துணைநின்றனர்.

ஆங்கிலேயர்களிடம் ஊமைத்துரையை ஒப்படைக்க மருது சகோதரர்கள் மறுத்தனர். இந்த முடிவு, இரு தரப்பினருக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியது.

இதில்தான் மருது சகோதரர்களின் வீரத்தையும் உறுதியையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஊமைத்துரையை ஒப்படைத்திருந்தால், தங்களது அரசையும் உயிரையும் காப்பாற்றிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆனால், ஆங்கிலேயர்களின் அச்சுறுத்தலுக்கு அடிபணிவதற்குப் பதிலாக, தங்கள் விடுதலைப் போராட்டத் தோழருக்குத் துணையாக நின்றனர்.

தோழமைக்காக ஆபத்தை ஏற்றுக்கொள்வதும், விடுதலைக்காக உயிரையே பணயம் வைப்பதும் மருது சகோதரர்களின் வரலாறு நமக்குக் கற்றுத்தரும் பாடங்களாகும்!

1801ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக மருது சகோதரர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் ஊமைத்துரையும் முக்கியப் பங்காற்றினார்.

இதன் மூலம் பாஞ்சாலங்குறிச்சியின் போராட்டமும் சிவகங்கைச் சீமையின் போராட்டமும் ஒரே எதிரிக்கு எதிராக ஒன்றிணைந்தன. 

 1801ஆம் ஆண்டு விடுதலைப் பிரகடனமும் மருது சகோதரர்களின் தியாகமும்! 

மருது சகோதரர்களின் போராட்டம் என்பது சில கோட்டைகளைக் காப்பாற்றுவதற்காக நடைபெற்ற போர் மட்டுமல்ல. அது அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும்.

1801ஆம் ஆண்டு மருது சகோதரர்கள் வெளியிட்ட புகழ்பெற்ற விடுதலைப் பிரகடனம், ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற அவர்களது எண்ணத்தை வெளிப்படுத்தியது.

திருச்சிராப்பள்ளிப் பிரகடனம் என்று அறியப்படும் இந்த வரலாற்று ஆவணம், அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகப் பரந்த அளவில் மக்களைத் திரட்டும் முயற்சியின் அடையாளமாக விளங்குகிறது.

சாதி, பிரிவு, பகைமை போன்ற வேறுபாடுகளை மறந்து, அந்நியர்களுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்து இந்தப் போராட்டத்தின் முக்கியமான செய்தியாக அமைந்தது.

ஆனால், ஆங்கிலேயர்களின் பெரும் படை வலிமையும் அவர்களுடன் இணைந்திருந்த உள்ளூர் ஆட்சியாளர்களின் ஆதரவும் போராட்ட வீரர்களுக்குப் பெரும் சவாலாக அமைந்தன.

இறுதியில் மருது சகோதரர்கள் கைது செய்யப்பட்டு, 1801 அக்டோபர் 24ஆம் தேதி திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.

அவர்களது உயிரைப் பறித்துவிட்டதாக ஆங்கிலேயர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அவர்களது தியாகம் தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டது.

மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டிருக்கலாம்; 

ஆனால் அவர்கள் ஏற்றிய விடுதலைத் தீயை யாராலும் அணைத்துவிட முடியவில்லை!

அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். இன்று அவர்களது வரலாற்றை நினைவுகூரும் நாம், அவர்களது தியாகத்தையும் ஒற்றுமை உணர்வையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும். 

 ஒற்றுமையே விடுதலையின் அடித்தளம்! 

இன்று நாம் நினைவுகூரும் மருது சகோதரர்களின் வரலாறு, தனிப்பட்ட வீரத்தின் வரலாறு மட்டுமல்ல; அது ஒற்றுமையின் வரலாறு!

வேலுநாச்சியாரின் அரசை மீட்டெடுக்கும் போராட்டத்தில் துணைநின்ற மருது சகோதரர்கள்!

அடைக்கலம் அளித்து ஆதரவளித்த விருப்பாட்சி கோபால் நாயக்கருடன் தொடர்பு கொண்டிருந்த மருது சகோதரர்கள்!

வீரபாண்டிய கட்டபொம்மனின் போராட்டத்துடன் தொடர்புடைய விடுதலைச் சிந்தனையைத் தொடர்ந்து முன்னெடுத்த மருது சகோதரர்கள்!

சிறையிலிருந்து மீண்டு வந்த ஊமைத்துரையை ஒப்படைக்க மறுத்து, அவருக்குத் துணையாக நின்ற மருது சகோதரர்கள்!

இவர்கள் அனைவரின் வரலாறும் நமக்கு ஒரே செய்தியைத்தான் சொல்கிறது.

விடுதலை என்பது ஒருவரின் தனிப்பட்ட வெற்றியல்ல; பலரின் தியாகமும் ஒற்றுமையும் இணைந்து உருவாக்கும் மகத்தான வெற்றி! 

அந்தக் காலத்தில் அவர்களிடம் இருந்தது குறைந்த ஆயுதங்களாக இருக்கலாம்; ஆனால், அவர்களுடைய நெஞ்சில் இருந்தது அளவற்ற வீரம்!

அவர்களிடம் இருந்தது குறைந்த படை வலிமையாக இருக்கலாம்; ஆனால், அவர்களுடைய உள்ளத்தில் இருந்தது அடிமைத்தனத்தை ஏற்காத உறுதி!

தங்களது உயிரையும் அரசையும் இழக்க நேரிட்டாலும், அந்நிய ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்த அந்த வீரர்களின் தியாகத்தை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

இன்று மருது சகோதரர்களின் நினைவு நாளில், அவர்களுடன் இணைந்து போராடிய அனைத்து விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் நமது வீர வணக்கத்தைச் செலுத்துவோம்!

அவர்களது தியாக வரலாற்றை நமது பிள்ளைகளுக்கும் இளைய தலைமுறைக்கும் எடுத்துச் சொல்வோம்!

வீரம் என்பது அச்சமின்மை!
ஒற்றுமை என்பது வலிமை!
தியாகம் என்பது வரலாற்றில் நிலைத்திருக்கும் பெருமை!
வீரமங்கை வேலுநாச்சியார் புகழ் வாழ்க!
விருப்பாட்சி கோபால் நாயக்கர் புகழ் வாழ்க!
வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் வாழ்க!
ஊமைத்துரை புகழ் வாழ்க!
விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த பெரிய மருது, சின்ன மருது சகோதரர்களின் புகழ் என்றும் நிலைத்து வாழ்க!

மருது சகோதரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்!

விடுதலை வீரர்களின் வரலாறு காப்போம்!

தமிழர் வீரத்தையும் ஒற்றுமையையும் தலைமுறை தோறும் வளர்ப்போம்!

நன்றி! வணக்கம்!

அன்புடன் 
அ. காசிராஜன் M.A.,

குறிச்சொற்கள்

வரலாறு தமிழ்நாடு மருது சகோதரர்கள் தமிழக வரலாறு விடுதலைப் போராட்ட வீரர்கள் சிவகங்கை வரலாறு வீரபாண்டிய கட்டபொம்மன் வேலுநாச்சியார் கோபால் நாயக்கர் ஊமைத்துரை சுதந்திரப் போராட்டம் வரலாற்றுக் கட்டுரைகள்
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண