பாஞ்சைப் பெருவேந்தனின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றித் தமிழகம் முழுவதும் புகழ்வணக்கம்!
கயத்தாறு முதல் சென்னை வரை தலைவர்கள், அரசியல் கட்சியினர், இராஜகம்பள சமுதாய அமைப்புகள் மரியாதை! பல்வேறு இடங்களில் மாலை அணிவிப்பு, மலரஞ்சலி, அன்னதானம்!
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அந்நிய ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்து, அஞ்சாத நெஞ்சத்துடன் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நின்று, தனது இன்னுயிரைத் தியாகம் செய்த பாஞ்சைப் பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 227-வது நினைவு நாள் அக்டோபர் 16-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மனாரின் வீரத்தையும், தன்மானத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில் தமிழக ஆளுநர், தமிழக முதல்வர், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் நேரிலும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் புகழ்வணக்கம் செலுத்தினர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் நினைவிடங்களிலும், திருவுருவச் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனிடையே, வீரபாண்டிய கட்டபொம்மனாரின் வரலாற்றுப் பெருமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில், பல்வேறு சமுதாய அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகள் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக, இராஜகம்பள சமுதாய அமைப்புகள், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வீர வணக்கம் செலுத்தினர்.
கயத்தாறு, மதுரை, அருப்புக்கோட்டை, வாசுதேவநல்லூர், கோவை, சத்தியமங்கலம், சென்னை எனப் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள், பாஞ்சைப் பெருவேந்தனின் புகழ் காலங்களைக் கடந்து மக்கள் மனங்களில் நிலைத்திருப்பதை எடுத்துக்காட்டின.
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற பாஞ்சைப் பெருவேந்தன்!
பாஞ்சாலங்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயர்களின் அரசியல் ஆதிக்கத்திற்கும் வரிவசூல் அழுத்தத்திற்கும் அடிபணிய மறுத்தவர். அதிகாரத்தின் முன் தலைவணங்குவதைவிட, தனது உரிமையையும் தன்மானத்தையும் காத்து நிற்பதே மேலானது என்ற உறுதியுடன் செயல்பட்ட அவரது வாழ்க்கை, தமிழகத்தின் வரலாற்றில் அழியாத தடம் பதித்துள்ளது.
ஆங்கிலேய ஆட்சியின் அதிகார வலிமைக்கு அஞ்சாமல் எதிர்த்து நின்ற அவரது போர்க்குணமும், துணிச்சலும், பின்னாளில் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்த பல்வேறு போராட்டங்களை நினைவுகூரும்போது முக்கியத்துவம் பெறுகின்றன. கட்டபொம்மனாரின் எதிர்ப்பை ஒடுக்கத் தீவிரமாகச் செயல்பட்ட ஆங்கிலேய அரசு, அவரைக் கைது செய்து, 1799-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் கயத்தாறில் தூக்கிலிட்டது.
ஆனால், அவரது உயிரை ஆங்கிலேயர்களால் பறிக்க முடிந்ததே தவிர, அவர் வெளிப்படுத்திய எதிர்ப்புணர்வையும் தன்மானத்தையும் வரலாற்றிலிருந்து அழிக்க முடியவில்லை. அவரது தியாகம், அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிந்து நிற்பதற்கான அடையாளமாகத் தலைமுறைகள் கடந்து நினைவுகூரப்படுகிறது.
தலைமுறைகள் கடந்தும் அணையாத தியாகத் தீ!
வீரபாண்டிய கட்டபொம்மனாரின் வரலாறு என்பது ஒரு பாளையக்காரரின் போராட்ட வரலாறு மட்டுமல்ல; அதிகாரத்தின் முன் உரிமையை இழக்க மறுத்த ஒரு தலைவனின் உறுதியையும், தன்னம்பிக்கையையும் எடுத்துரைக்கும் வரலாறாகும்.
சுயமரியாதை, தன்மானம், உரிமை உணர்வு ஆகியவற்றின் அடையாளமாக அவர் இன்றும் போற்றப்படுகிறார். அவரது வாழ்க்கையை அறிந்துகொள்வது, கடந்தகால வரலாற்றை நினைவுகூர்வதோடு மட்டுமின்றி, உரிமைகளின் மதிப்பையும் அவற்றைக் காப்பதற்கான மனஉறுதியையும் இளைய தலைமுறையினருக்கு உணர்த்துகிறது.
அந்த வகையில், வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 227-வது நினைவு நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சிகள், அவரது வீரத்தையும் தியாகத்தையும் மக்கள் தொடர்ந்து போற்றிவருவதற்குச் சான்றாக அமைந்தன.
குடியரசு துணைத்தலைவர் புகழாரம்!
டெல்லியிலுள்ள குடியரசுத்துணைத்தலைவர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த கட்டபொம்மன் திருவுருவப்படத்திற்கு குடியரசு துணைத்தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனைப்போல் ஒரு மாவீரனை இந்தநாடு இன்னும் பார்க்கவில்லை என்ற புகழஞ்சலியுடன் மலர்தூவி மரியாதை செய்தார்.
மக்கள் பவனில் ஆளுநர் அர்லேக்கர் மரியாதை!
மக்கள் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்டபொம்மன் நினைவுநாள் நிகழ்வில் தமிழக ஆளுநர் இராஜேந்திர விஸ்நாத் அர்லேகர் கட்டபொம்மன் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக முதல்வர் கட்டபொம்மனுக்கு புகழ்வணக்கம்!
ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கு அடிபணியாமல், தாய்மண்ணின் உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் இறுதிவரை போராடிய விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு நாளில், அவரது தியாகத்தைப் போற்றி வணங்குகிறேன்!
அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் துணிவும், உரிமைகளைக் காக்கும் உறுதியும், தாய்மண்ணைப் போற்றும் உணர்வும் ஒவ்வொருவரிடமும் வளர வேண்டும் என்பதற்கு அவரது வாழ்க்கை வரலாற்றுப் பாடமாகத் திகழ்கிறது.வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகமும், தீரமும் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத பெருமையாக நிலைத்திருக்கும்! என தனது சமூக வளைதளப்பக்கத்தில் கட்டபொம்மனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதேபோல் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தத்தமது சமூக வளைதளப்பக்கங்களில் கட்டபொம்மனுக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
கயத்தாறு – நினைவிடத்தில் வைகோ மரியாதை; அன்னதானம் தொடக்கம்!
வீரபாண்டிய கட்டபொம்மனார் தூக்கிலிடப்பட்ட கயத்தாறு நினைவிடத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.பின்னர், திறந்த வேனில் இருந்தபடி வீரபாண்டிய கட்டபொம்மனாரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றிப் புகழ்ந்து பேசினார்.
அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர்கள் இராஜேந்திர பாலாஜி மற்றும் சண்முகநாதன் ஆகியோர் கட்சியின் தலைமைக்கழகம் சார்பில் கயத்தாறில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு. பழனிச்சாமி, மூத்த வழக்கறிஞர் பழனிச்சாமி, தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் கே. இராமகிருஷ்ணன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சுருளிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மதுரை – பண்பாட்டுக் கழகம் சார்பில் புகழ்வணக்கம்!
மதுரையில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் பாண்டியன் மற்றும் இளைஞரணிச் செயலாளர் பூப்பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு வீரபாண்டிய கட்டபொம்மனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அருப்புக்கோட்டை – கட்டபொம்மன் சிலைக்கு முன்னாள் அமைச்சர் மரியாதை!
அருப்புக்கோட்டையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மனாரின் திருவுருவச் சிலைக்கு, முன்னாள் அமைச்சரும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வாசுதேவநல்லூர் – கட்டபொம்மன் அறக்கட்டளை சார்பில் நினைவேந்தல்!
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை சார்பில் 227-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினரும், வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளையின் தலைவருமான நாகராஜன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜ், நெற்கட்டும்செவல் ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியராஜா, ராமநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வட்டார காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வாசுதேவநல்லூர் பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனாரின் திருவுருவப் படத்திற்கு, தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆலங்குளம் செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி புகழஞ்சலி செலுத்தி வீர வணக்கம் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கிளாங்காடு மணி, நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வராஜ், மாவட்ட விவசாய அணி தலைவர் மற்றும் பி.சி.சி. உறுப்பினர் மணிகண்டன், முன்னாள் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சிவகிரி கணேசன், நம்பிராஜன், பேரூராட்சி கவுன்சிலர் மாரிமுத்து, முன்னாள் மதிமுக நகரச் செயலாளர் கணேசன், மாவட்ட திமுக வர்த்தக அணித் துணை அமைப்பாளர் கட்டபொம்மன், வட்டார விவசாய அணி தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், மலையடிக்குறிச்சி ஜக்கம்மாத்துரை, சிந்தாமணிப்பேரிபுதூர் ராஜேந்திரன், ராஜகம்பள நாயக்கர் சமுதாய நாட்டாமை கோட்டியப்பன், நவநீதகிருஷ்ணன், திருமலைசாமி, கணக்கர் கட்டபொம்மன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
கோவை – ஈச்சனாரியில் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் மரியாதை!
கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில், ஈச்சனாரியில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளர் டி. சிவசாமி, திமுக வட்டச் செயலாளர் க. மகாலிங்கம், மகளிரணி ஒருங்கிணைப்பாளர் பாக்கியலட்சுமி, வடக்கு மாவட்டப் பொருளாளர் கணேசன், தொழிலதிபர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சங்க நிர்வாகிகள் மற்றும் பிற பங்கேற்பாளர்களும் வீரபாண்டிய கட்டபொம்மனாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.சத்தியமங்கலம் – பண்பாட்டுக் கழகம் சார்பில் மரியாதை!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் சார்பில் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. தமிழ்ச்செல்வி மற்றும் நகர மன்றத் தலைவர் ஜானகி ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு வீரபாண்டிய கட்டபொம்மனாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பண்பாட்டுக் கழக மாநிலக் காப்பாளர் மோதூர் முனுசாமி, மாவட்டத் தலைவர் எஸ்.பி.டி. ரங்கசாமி, மாவட்டச் செயலாளர் சி.டி. சிதம்பரம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினருமான வி.என். சின்னச்சாமி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் என்.என்.சிவராஜ், வினோத், விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.கரூரில் கோ.கலையரசன் கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை!
கரூர் தோரணக்கல்பட்டியில் அமைந்துள்ள கட்டபொம்மன் சிலைக்கு அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கோ.கலையரசன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய மாணவரணிச் செயலாளர் R. பெருமாள்சாமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.சென்னை – காந்தி மண்டப வளாகத்தில் மாலை அணிவித்து மரியாதை!
தலைநகர் சென்னையில், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனாரின் ஆளுயரச் சிலைக்கு, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ. இராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, டி ஆறுமுகம், பி.ரஜினி, பி.சரவணன், சி.மணி, சி.வெள்ளைப்பாண்டி, ஜி.பொன்னுராம், எஸ்.ராஜு, டி.திருமுருகன், எம்.ஆனந்த் உள்ளிட்ட அன்னதானக்குழுவினர் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஈரோடு இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஒருங்கிணைப்பாளரும், தமிழக வெற்றிக் கழகப் பிரமுகருமான என். பவுல்ராஜ் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மேன்மக்கள் அறக்கட்டளைத் தலைவர் பி. ராமராஜ், இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் துணைத் தலைவர் ஜி. நாராயணசாமி, ஒருங்கிணைப்பாளர் டி. சுப்பிரமணியன், மண்டலப் பொறுப்பாளர்கள் ஆறுமுகச்சாமி, இராமாவரம் சுப்பிரமணி, ஜாபர்கான்பேட்டை செந்தில்குமார், காளிமுத்து, பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அகில இந்திய தெலுகு சம்மேளனத்தின் சார்பில் டாக்டர் சி.எம்.கே.ரெட்டி அவர்கள் கலந்துகொண்டு கட்டபொம்மனாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஹெலுக சம்மேல நிர்வாகிகள் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
வரலாற்றை நினைவில் கொள்வோம்; வீரத் தியாகத்தைத் தலைமுறைகளுக்குக் கடத்துவோம்!
ஒரு வீரனின் உடல் மறைந்தாலும், அவன் வாழ்ந்த இலட்சியங்களும் வெளிப்படுத்திய துணிச்சலும் வரலாற்றில் நிலைத்திருக்க முடியும் என்பதற்கு வீரபாண்டிய கட்டபொம்மனாரின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு.
அவரது நினைவு நாளில் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பல்வேறு தலைவர்களும், சமுதாய அமைப்புகளும் மரியாதை செலுத்தியிருப்பது, அவரது வரலாற்றுப் பங்களிப்பு பல்வேறு தரப்பினராலும் நினைவுகூரப்படுவதை வெளிப்படுத்துகிறது.
கயத்தாறு முதல் சென்னை வரை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சிகள், பாஞ்சைப் பெருவேந்தனின் வீர வரலாற்றை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் முயற்சியாக அமைந்தன. அவரது வாழ்க்கையைப் படிப்பதும், போராட்டத்தைப் புரிந்துகொள்வதும், வரலாற்றை ஆதாரங்களுடன் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதும் இன்றைய சமூகத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.
பாஞ்சைப் பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் வீரமும் தியாகமும் என்றும் போற்றப்படட்டும்!
வீரவணக்கம்! வீர வணக்கம்!!