அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55-ஆம் ஆண்டு விழா!
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தொடங்கிய இயக்கம்!
புரட்சித் தலைவி அம்மா வளர்த்த இயக்கம்!!
புரட்சித் தமிழர் எடப்பாடியார் வழிநடத்தும் இயக்கம்!!!
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் இரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே!
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மை விசுவாசிகளே!
கழகத்தின் ஆற்றல்மிகு பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், புரட்சித் தமிழர், மதிப்பிற்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களின் வழியில் பயணிக்கும் கழக உடன்பிறப்புகளே!
என் உயிரின் உயிரான உறவுகளே! நண்பர்களே!
அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் !
இன்று நாம் கொண்டாடுவது ஒரு சாதாரண அரசியல் கட்சியின் ஆண்டு விழா அல்ல!
அரை நூற்றாண்டைக் கடந்து, மக்கள் நெஞ்சங்களில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்திருக்கும் ஓர் அரசியல் பேரியக்கத்தின் பெருமைமிகு விழா!
சுமார் 31 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக் கட்டிலில் இருந்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத் திட்டங்களை கொண்டு வந்து மக்கள் பணியாற்றியுள்ள மாபெரும் மக்கள் இயக்கத்தின் சிறப்புமிகு விழா!
ஆம்! அக்டோபர் 17 — அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆண்டு விழா!
1972-ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், இன்று 55-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்த இயக்கத்தின் வரலாறு என்பது வெறும் அரசியல் வரலாறு மட்டுமல்ல;
ஏழை எளிய மக்களின் நம்பிக்கை வரலாறு!
உழைக்கும் மக்களின் உரிமை வரலாறு!
தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் அழுத்தமான தடம் பதித்த மக்கள் இயக்கத்தின் வரலாறு!
அஇஅதிமுக என்ற பொன் எழுத்துகளில் அடங்கியிருப்பது ஓர் அரசியல் கட்சியின் பெயர் மட்டுமல்ல;
அண்ணாவின் கொள்கை,
எம்ஜிஆரின் மக்கள் தொண்டு,
அம்மாவின் துணிச்சலான தலைமை,
எடப்பாடியாரின் அயரா களப்பணி!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் — மக்கள் தொண்டின் அடையாளம்!
ஒரு கட்சியைத் தொடங்குவது எளிது! ஆனால் அந்தக் கட்சியை மக்களின் இதயங்களில் நிலைநிறுத்துவது சாதாரணமான காரியம் அல்ல!
அதைச் சாதித்துக் காட்டியவர் நமது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள்.
1972-ல் கழகத்தைத் தொடங்கி, 1977-ல் ஆட்சிப் பொறுப்பேற்று, 1980 மற்றும் 1984 தேர்தல்களிலும் மாபெரும் வெற்றிபெற்று, மக்கள் பேராதரவுடன் நல்லாட்சி நடத்தியவர் நமது புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.
ஏழை மாணவர்களின் பசியைப் போக்கச் சத்துணவுத்திட்டத்தை விரிவுபடுத்தினார்.
கல்வி, கிராமப்புற வளர்ச்சி,விவசாயிகள் நலன், ஏழை மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் எனப் பல துறைகளில் கவனம் செலுத்தினார்.
அவரது அரசியல் என்பது பதவிக்கான அரசியல் அல்ல; மக்களின் அன்பைப் பெறுவதற்கான அரசியல்!
திரையில் அவர் நாயகன்
தரையில் வாரி வழங்கும் வள்ளல்
மக்கள் மனதில் அவர் இதயதெய்வம்
அரசியலில் அவர் புரட்சித் தலைவர்!
எம்ஜிஆரின் புகழ் இன்று வரை நிலைத்து நிற்பதற்குக் காரணம், அவர் விட்டுச் சென்ற மக்கள் தொண்டின் அடையாளங்கள்தான்!
புரட்சித் தலைவி அம்மா துணிச்சலின் மறுபெயர் - அம்மா
புரட்சித் தலைவர் விட்டுச் சென்ற அரசியல் பாதையைத் அசாத்திய துணிச்சலுடன், தொடர்ந்து அதிமுகவைப் பல தேர்தல்களில் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் நமது புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள்.
1991, 2001, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் அதிமுக தலைமையிலான ஆட்சியை அமைத்து, தமிழக அரசியலில் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர்.
2014 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் 37 இடங்களில் வென்றதும், அப்போது இந்திய பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுக உருவெடுத்ததும் அவரது அரசியல் தலைமையின் முக்கியமான சாதனைகளில் ஒன்றாக இன்றும் திகல்கிறது .
அம்மாவின் ஆட்சியில் பெண்களின் முன்னேற்றம், மாணவர்களின் கல்வி, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
அம்மா உணவகங்கள், தொட்டில் குழந்தைத் திட்டம், பெண்களுக்கான நலத்திட்டங்கள், மாணவர்களுக்கான மிதிவண்டி, மடிக்கணினித் திட்டம் போன்றவை மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு பெற்றது .
மக்களின் தேவைகளை உணர்ந்து திட்டங்களைச் செயல்படுத்திய தலைமைதான் அவருடைய தனிச்சிறப்பு.
அம்மா என்ற மூன்றெழுத்து, தமிழகத்தின் பல ஏழைக் குடும்பங்களுக்கு நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்ந்தது.
அவருடைய துணிச்சல், நிர்வாகத் திறன், அரசியல் உறுதி ஆகியவை அதிமுக தொண்டர்களுக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்!
கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் — களப்பணியின் அடையாளம்!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் துவங்கப்பட்டு , புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட இந்த இயக்கத்தை, அவர்களுக்குப் பிறகு சவால்கள் நிறைந்த அரசியல் சூழலில் வழிநடத்தி வருபவர் நமது கழகப் பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், அண்ணன் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள்.
2017 முதல் 2021 வரை முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த அவர், கொரோனா பெருந்தொற்று காலம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டார்.
அவரது ஆட்சிக் காலத்தில் குடிமராமத்துத் திட்டம் மூலம் நீர்நிலைகளைப் பராமரித்தல், விவசாயிகளின் தேவைகளுக்குக் கவனம் செலுத்துதல், நெடுஞ்சாலைகள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளை முன்னெடுத்ததுடன் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள், மருத்துவ கல்விக்கு 7.5% உள் ஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 66 இடங்களை வென்று வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
தொடர்ந்து, கழகத்தை வழிநடத்தி, தொண்டர்களை ஒருங்கிணைத்து, மக்களின் பிரச்சினைகளை அரசியல் களத்தில் எடுத்துரைத்து வருகிறார்.
தலைமை என்பது பதவியில் அமர்வது மட்டுமல்ல;
சோதனைகள் வரும்போது தொண்டர்களைத் தளராமல் வழிநடத்துவதும்தான்!
அந்த வகையில், கழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் நாம் ஒவ்வொருவரும் உழைக்கவேண்டும்.
தலைவர்கள் வழிகாட்டுவார்கள்!
தொண்டர்கள்தான் இயக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள்!
பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்கள் நமக்கு மக்கள் தொண்டைக் கற்றுக்கொடுத்தார்.
சமூக நீதி காத்த வீராங்கனை அம்மா அவர்கள் நமக்குத் துணிச்சலான தலைமையைக் கற்றுக்கொடுத்தார்.
குடிமராமத்து நாயகன் எடப்பாடியார் அவர்கள் நமக்குக் களத்தில் தொடர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறார்.
இந்த மூன்று தலைவர்களின் அரசியல் பயணத்திலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றுதான் - மக்கள் நலனே நமது முதன்மையான இலக்காக இருக்க வேண்டும்.
கழகத்தின் 55-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் நாம் உறுதியேற்போம்!
ஏழை எளிய மக்களின் நலனுக்காக உழைப்போம்!
விவசாயிகளின் குரலாக ஒலிப்போம்!
இளைஞர்களின் எதிர்காலத்திற்காகச் செயல்படுவோம்!
பெண்களின் முன்னேற்றத்திற்குத் துணை நிற்போம்!
மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நமது களப்பணியைத் தொடர்ந்து செய்வோம்!
அதிமுக என்பது பல தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் ஓர் அரசியல் இயக்கம்.
நமது ஒற்றுமைதான் நமது பலம்!
நமது உழைப்புதான் நமது அடையாளம்!
நமது மக்கள் தொண்டுதான் நமது வெற்றிக்கான பாதை!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் வாழ்க!
புரட்சித் தலைவி அம்மா புகழ் வாழ்க!
கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் தலைமையில் கழகம் மென்மேலும் வளர்க!
அதிமுக வெல்க!
இரட்டை இலை வெல்க!
ஒன்றுபடுவோம்!
வென்றேடுப்போம்!
உழைப்போம்!
உயர்வோம்!
மீண்டும் எடப்பாடியார் தலைமையில் கழக ஆட்சி அமைய சபதமேற்போம்!!!
என்றும் எடப்பாடியார் வழியில்,
அ.காசிராஜன் M.A.,
மாவட்ட இலக்கிய அணி துணைச்செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம்