Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
தங்கநகைக்கடன் நிபந்தனை - எதிர்ப்புக்குப் பணிந்தது ரிசர்வ் வங்கி

தங்கநகைக்கடன் நிபந்தனை - எதிர்ப்புக்குப் பணிந்தது ரிசர்வ் வங்கி

Radheyan 08 Jun 2025 | 06:00 PM
பகிர்:

தற்போது வங்கிகளில் நகைக்கடன் பெறுவோர் ஆண்டுதோறும் கடந்தொகைக்கான வட்டியை மட்டுமே கட்டி காலநீட்டிப்புச் செய்துகொள்ளலாம். அதேபோல் அடாமனத் தங்கநகைக்கான உரிமை குறித்து வங்கிகளுக்கு எவ்வித ஆவணங்களும் வழங்கத்தேவையில்லை என்ற நிலை இருந்துவருகிறது.

இதனால் அவசரத் தேவைகளுக்காக பொதுமக்கள் தங்கள் சேமிப்பு நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்து மிக எளிதாகப் பணம் பெறமுடிந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தங்கநகைக்கடன் புதுப்பிப்பிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி வங்கிகளில் நகைக் கடன் வாங்கியவர்கள் கால அவகாசம் முடிந்ததும் அசலுடன் வட்டியைச் சேர்த்துக் கொடுத்து நகையை மீட்டு, மறுநாள்தான் மீண்டும் அடகு வைக்க முடியும். இதனால் ஒரே கடனுக்காக ஆண்டுதோறும் நகை மதிப்பிட்டுக்கட்டணமும், ப்ராஸசிங் பீஸ் எனப்படும் செயல்முறை கட்டணமும் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அதேபோல்  வாடிக்கையாளர்கள் நகைக்கான ஒரிஜினல் ரசீதுகளைக் காட்டித்தான் அடமானம் வைக்கவேண்டும் என்ற கடுமையான நிபந்தனைகளை விதிமுறைகளாக்கியது. 

ரிசர்வ் வங்கியின் இம்முடிவிற்கு பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் தலைவர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்புக்கிளம்பியது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இராஜ்யசபாவில் ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல் நெறிக்கு எதிராக கடும் எதிர்ப்பை பதிவு செய்ததோடு, உடனடியாக திருத்தப்பட்ட  வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதேபோல் மதுரைத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கடிதம் வாயிலாகவும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களை நேரில் சந்தித்தும் தங்கநகைக்கான திருத்தப்பட்ட  வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அதைத் திரும்பப்பெறுமாறும் வலியுறுத்தினார்.

இந்நிலையில், தங்க நகைக்கடன் தொடர்பாக தான் வெளியிட்ட விதிமுறைகளில் நாம் கோரிய பத்து மாற்றங்களை ஏற்று புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வு வங்கி அறிவித்துள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி மகிழ்ச்சி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

இது இந்திய ரிசர்வு வங்கியின் வரலாற்றிலேயே இது வரை நிகழாத ஒன்று.இந்த மாபெரும் வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். இனி வங்கியில் நகைக்கடன் ஆவணங்கள் அனைத்தும் தாய் மொழியிலேயே இருக்கும் என்பது இந்த வெற்றியின் மகுடமாகும்.

தங்க நகை கடன் தொடர்பாக சாமானிய மக்களுக்காக நான் எழுப்பிய கோரிக்கைகளை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

1. இந்த விதிமுறைகள் உடனடியாக அமுக்கு வரும். அதிகபட்சமாக 2026 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்பு இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ளது.

2. ரூபாய் 2.5 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு கடனாளியின் திருப்பி செலுத்தும் திறன் பற்றிய நிபந்தனை கைவிடப்பட்டது.

3. 2024 செப்டம்பர் 30ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி மறுக்கப்பட்ட கடனை புதுப்பித்தல் (Renewal) மற்றும் கூடுதல் கடன் (Top up) தற்போது வழங்கப்படும்.

4. அதற்காக புதிதாக கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதாவது கடனை புதுப்பிக்கும் போது அல்லது கூடுதல் கடன் பெறும்போது முந்தைய வழிகாட்டுதல் படி விதிக்கப்படவிருந்த தங்க பரிசீலனை (Jewel Appraisal) தொகை, கடன் செயல்முறை தொகை (Processing Fee) எதுவும் புதிதாக விதிக்கப்படாது.

5. நகைக்கான ரசீது கேட்கப்படாது. பழைய முறைப்படியே கடன் வாங்குபவர்கள் "இந்த நகை என்னுடையது தான்" என்று ஒரு சுய அறிவிப்பு செய்தாலே போதுமானது.

6. ரூபாய் 2.5 லட்சம் வரை கடனுக்கு நகை மதிப்பில் 85 சதவீதம், 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 80 சதவீதம், ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 75% கடன் வழங்கப்படும். 

7. விவசாய கடன் மற்றும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் அவசர கடன் வாங்குபவர்கள் எந்த நோக்கத்திற்காக கடன் வாங்குகிறார்களோ அதை உறுதி செய்யும் பொறுப்பு கடன் வழங்கும் நிறுவனங்களைச் சார்ந்தது என்ற சரத்து நீக்கப்பட்டு விட்டது. கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளியின் கணக்கில் தான் கடன் தொகையை செலுத்த வேண்டும். மூன்றாம் நபர் கணக்கிற்கு கடனை வழங்கக் கூடாது.

8. நகை கடன் முழுவதுமாக செலுத்தப்பட்ட உடனே அன்றைய தினமே நகைகள் கடனாளிகளிடம் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது அதிகபட்சமாக ஏழு வேலை நாட்களுக்குள் திருப்பி தரப்பட வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நாளைக்கும் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளிகளுக்கு ரூபாய் 5000 இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் நகையை தாமதமாக திருப்பி கொடுத்தால், கடனாளி கடன் வழங்கும் நிறுவனத்திடம் வேறு இழப்பீடு கோரும் உரிமையும் உள்ளது.

9. வங்கிகளால் விற்கப்படும் 22 கேரட் அல்லது அதற்கு மேல் தூய்மையான தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்ற நிபந்தனை கைவிடப்பட்டது.

10. கடன் வாங்குபவர்களின் நலனை பாதிக்கும்- குறிப்பாக கடனுக்கான- நிபந்தனைகள் மற்றும் முக்கிய கடிதங்கள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளிலே அல்லது கடனாளிகள் விரும்பும் மொழியிலே இருக்கும்.

இவ்வாறு அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சாமானியர்களுக்கு பேரிடியாக இருந்த இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் துயரம் தரத்தக்கது என்பதை உணர்ந்துகொண்டு நிபந்தனைகளை விலக்கிக்கொண்ட ரிசர்வ் வங்கியின் செயல் பாராட்டுக்குறியது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு su.venkatesan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண