சரண்யா தூராடி என்ற சின்னத்திரை நடிகை தனது யூடுயூப் பக்கத்தில் இந்திய சுதந்திரப்போராட்ட மாவீரர் திலகம் வீரபாண்டிய கட்டபொம்மன் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் இரண்டு வீடியோக்களை பதிவேற்றியுள்ளார். செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடித்து புகழ்பெற்றார் சரண்யா தூராடி தனது பெயரில் வெளியாகும் யூடியூப் பக்கத்தில் செப்பேடுகள் குறித்தும் தமிழ் மன்னர்கள் குறித்தும் பல வீடியோக்களைப் பகிர்ந்துவருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் சரண்யா தூராடி கட்டபொம்மன் குறித்து ஆதாரமற்ற அரைகுறை தரவுகளுடன் வெளியிடப்பட்டுள்ள வீடியோ மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சரண்யா தூராடியின் இசெயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ள கட்டபொம்மன் வாரிசுதாரர்கள், கட்டபொம்மன் குறித்த வீடியோக்களை உடனடியாக நீக்காவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். இதுகுறித்து வாரிசுதாரர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்திய விடுதலைப் போராட்டத்தின் தியாகச் சுடர், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் மூத்த வாரிசுதாரர்களாகிய நாங்கள், இந்த கண்டன அறிக்கையை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகமான யூடியூபில் "Sharanya Turadi" l (https://youtube.com/@sharanyaturadiog) என்ற சேனலை நடத்தி வரும் நபர், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் தூய்மையான வரலாற்றுப் பெருமையைக் கெடுக்கும் நோக்கில், திட்டமிட்ட வன்மத்துடன் பின்வரும் இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார்:
1. "கெட்டி பொம்முலு கட்டபொம்மன் ஆன கதை | Kattabomman Cinema Myth vs History Explained"
2. "கொள்ளைக்காரனா? தியாகியா? | Kattabomman Cinema Myth vs History Explained"
மேற்கண்ட வீடியோக்களில், எவ்வித அதிகாரப்பூர்வ வரலாற்று ஆதாரங்களும் இன்றி, வெறும் வணிக லாபத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் எங்களது மாவீரன் கட்டபொம்மன் அவர்களின் வரலாற்றைத் திரித்து, மிகவும் கீழ்த்தரமான முறையில் அவதூறுகளைப் பரப்பியுள்ளார்.
தாய்நாட்டின் விடுதலைக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த ஒரு மாமன்னரை இழிவுபடுத்துவது, அவரது புகழைக் களங்கப்படுத்தும் செயலாகும்.
எங்கள் முன்னோரின் தியாகத்தை உலகமே போற்றி வணங்கும் வேளையில், இத்தகைய நச்சுத்தன்மை வாய்ந்த கருத்துக்களைப் பரப்புவது, வாரிசுதாரர்களாகிய எங்களையும், அவரைத் தங்கள் குலதெய்வமாகவும் தலைவனாகவும் ஏற்று வாழ்ந்து வரும் ஒட்டுமொத்த சமூக மக்களின் உணர்வுகளையும் மிகக் கொடூரமாகப் புண்படுத்தியுள்ளது.
வரலாற்று உண்மைகளைச் சிதைக்கும் இத்தகைய செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சம்பந்தப்பட்ட நபர், எங்களது முன்னோரை இழிவுபடுத்தி வெளியிட்ட அந்த இரண்டு அவதூறு வீடியோக்களையும் யூடியூப் தளத்தில் இருந்து உடனடியாக நீக்க (Delete) வேண்டும்.
இந்த இரண்டு வீடியோக்கள் உடனடியாக நீக்கப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட நபர் மீது சிவில் மற்றும் கிரிமினல் பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளும் மிகக் கடுமையாக மேற்கொள்ளப்படும் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.