அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் வெற்றிபெற்று பல்வேறுதுறைகளில் அரசுப்பணிக்கு தெர்வு செய்யப்பட்டுள்ள இராஜகம்பள சமுதாயத்தினருக்கு சமுதாயத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு,
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள அரசுப்பணியிடங்களை நிரப்புவதற்காக அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். உதவி ஆட்சியர் தொடங்கி கடைநிலை ஊழியர் வரையில், பலதுறைகளிலும் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. திமுக அரசு பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு தேர்வாணையத்திலும், தேர்வுமுறைகளிலும் பல்வேறு மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் நிரந்தர கால அட்டவணைப்படி தேர்வுகள் நடத்துவதற்கான திட்டத்தை சமீபத்தில் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது. இதன் மூலம் ஆண்டுதோறும் குரூப் தேர்வுகள் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு அரசுப்பணியில் சேர்வதை லட்சியமாகக் கொண்டவர்களுக்கு பெறும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் இராஜகம்பள சமுதாயத்தினர் பலர் வெற்றிபெற்று அரசுப்பணிக்கான நியமன ஆணைக்காக காத்திருந்தனர். இதற்கிடையே குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது வெற்றிபெற்றவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கி, துறைவாரியாக உள்ள காலிப்பணியிடங்களை அரசு நிரப்பி வருகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பள்ளபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மல்லம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திரு.சென்னியப்பன் அவர்களின் மகன் கோவிந்தசாமி இந்துசமய அறநிலையத்துறையில் தட்டச்சராக பணியில் சேர்ந்துள்ளார். ஈரோடு சூர்யா பொறியியல் கல்லூரியில் இளங்கலை மின்னனுவியல் துறையில் பட்டம்பெற்ற கோவிந்தசாமி, கடந்த மூன்று வருடங்களாக குரூப் சர்வீஸ் தேர்வுகளை தொடர்ச்சியாக எழுதிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், விருதுநகர் மாவட்டம், பாலவநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான திரு.தமிழ்ச்செல்வன் அவர்களின் மகளான சுகன்யா குரூப் 4 தேர்வில் வெற்றிபெற்றதையடுத்து வணிகவரித்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுகன்யா வேலூரில் பணியாற்றுவதற்கான நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. சுகன்யா சென்னையிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் பிஇ பட்டம்பெற்றுள்ளார். கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக குரூப் தேர்வுகளை எழுதிவந்த சுகன்யாவிற்கு தற்போது வெற்றி சாத்தியமாகியுள்ளது.
குரூப் தேர்வில் வெற்றிபெற்று பல்வேறுதுறைகளில் பணிநியமன ஆணை பெற்றுள்ள இராஜகம்பள சமுதாய இளைஞர்களுக்கு சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, இராஜகம்பளத்தார் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.இராமராஜ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.