Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன?
விளம்பரங்கள்
ONEPIXEL ACADEMY
ONEPIXEL TECHNOLOGIES
தமிழக முதல்வர் திறந்துவைக்கும் தளி எத்தலப்பநாயக்கர் முழுவுருவச்சிலை!

தமிழக முதல்வர் திறந்துவைக்கும் தளி எத்தலப்பநாயக்கர் முழுவுருவச்சிலை!

Radheyan 07 Oct 2024 | 05:05 PM
பகிர்:

 திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டத்தில் அமைந்துள்ள தளி பாளையப்பட்டை ஆட்சி செய்தவர் எத்தலப்ப நாயக்கர். திருமூர்த்தி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தளி பாளையப்பட்டு எத்தலப்பர் ஆட்சியில் நீர்மேலாண்மையில் சிறந்து விளங்கியதாக கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அனைத்து சமுதாய வேளாண்குடி மக்களுக்கும் எவ்வித பாகுபாடும், தங்கு தடையுமின்றி நீர் வழங்கப்பட்டதால் தளி பாளையப்பட்டில் விவசாயம் செழித்தோங்கி வளர்ந்தது. மற்ற கம்பளத்து பாளையக்காரர்களைப் போலவே தளி பாளையப்பட்டிலும் அனைத்து சமுதாய மக்கள் நலனிலும் அக்கறையோடு நிர்வாகம் செயல்பட்டதால், மக்கள் நல்லிணக்கத்தோடு அமைதியான முறையில் வாழ்ந்தனர்.

1799-ல் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்ட செய்தியறிந்து கொதித்தெழுந்தார் தளி பாளையக்காரர் எத்தலப்ப நாயக்கர். சக கம்பளத்து பாளையக்காரரான கட்டபொம்மனை அந்நியர் வந்து தூக்கிலிட்டதை பொருத்துக் கொள்ள முடியாத எத்தலப்ப நாயக்கர் ஆங்கிலேயருக்கு பாடம் புகட்ட முனைந்தார். 


கட்டபொம்மனை தூக்கிலிட்ட கையோடு மற்ற பாளையங்களையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நினைத்த ஆங்கிலேயர்கள், அனைத்து பாளையங்களுக்கும் தூதுவர்களை அனுப்பு தங்கள் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தினர். அதன்படி தஞ்சையிலிருந்து தளி பாளையத்திற்கு தூது வந்த அந்திரை கேதிஷ் என்ற ஆங்கிலேயரை தனியாக அழைத்துச்சென்று தூக்கிலிட்ட எத்தலப்ப நாயக்கர், கட்டபொம்மன் கொல்லப்பட்டதற்கு பழிக்குப்பழி வாங்கினார்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின் மற்ற பாளையக்காரர்களெல்லாம் ஆங்கிலேயருக்கு வெண்சாமரம் வீசத்தயரான நிலையில், தளி எத்தலப்ப நாயக்கர் கட்டபொம்மனைப்போலவே துணிச்சலோடு தூதுவன் அந்திரை கேதிஷை தூக்கிலிட்ட செய்தியறிந்து கொதித்துப்போயினர். இதனால் தளி பாளையத்தின் மீது போர்தொடுத்து ஒரே நாளில் தளிக்கோட்டையை தரைமட்டமாக்கியதோடு எத்தலப்ப நாயக்கரையும் கொன்று பழிதீர்த்துக்கொண்டனர்.

தமிழகத்தில் எழுபதுக்கும் மேற்பட்ட பாளையங்கள் இருந்தபோதும் ஆங்கில ஆதிக்கத்திற்கு அடிபணிய மற்றுத்து வீரமரணமடைந்த பாளையக்காரர்கள் ஒருசிலரே. அந்த வகையில்  கட்டபொம்மன், கோபால நாயக்கர் வரிசையில் எத்தலப்ப நாயக்கரும் வரலாற்றில் அழியாப்புகழைப் பெற்றுள்ளார்

எனினும், நவீன கால வரலாற்றாசிரியர்களால் தளி எத்தலப்ப நாயக்கரின் தியாகம் போதிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை என்ற குறை நீண்டநாட்களாக இருந்துவந்தது. இந்நிலையில், 2021-சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட அன்றைய எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஒன்றை நியமித்து பொது மக்களிடமிருந்தும், சமுதாய அமைப்புகளிடமிருந்தும் தங்கள் குறைகளையும், கோரிக்கையையும் பெறும்படி பணித்திருந்தது. 

அதனடிப்படையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பலதரப்பட்ட மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தது. அப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த அக்குழுவிடம் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் எத்தலப்ப நாயக்கர் ஆட்சி செய்த திருமூர்த்திமலையில் அவர் பெயரில் மணிமண்டபம் அமைக்கக்கோரியும், தளி பாளையத்திற்குட்பட்ட உடுமலை நகராட்சி வளாகத்தில் எத்திலப்ப நாயக்கரின் முழுவுருவச்சிலை அமைத்துத்தரக்கோரியும் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்புக்காட்டி வந்தது. அந்தவகையில் கம்பளத்தாரின் மிக நீண்ட கோரிக்கையான மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாருக்கு தலைநகர் சென்னையில் சிலை, எத்திலப்ப நாயக்கருக்கு மணிமண்டபம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தமிழக அரசு சட்டமன்றத்தில் அறிவித்ததோடு, நிதி ஒதுக்கியும் அறிவிப்பு வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக மாவீரன் கட்டபொம்மனுக்கு கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் முழுவுருவச்சிலை அமைத்ததோடு, தமிழக முதல்வரே நேரடியாகச் சென்று சிலையை திறந்து வைத்தார். 

அதேபோல் தளி எத்தலப்பருக்கு மணி மண்டபம் அமைக்கும் பணியும், ஆளுயரச்சிலை தயாரிக்கும் பணியும் கடந்த இரண்டாண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது அப்பணிகள் நிறைவுபெற்றதை அடுத்து மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 9-ஆம் தேதி காலை 9 மணியளவில் தலைமைச்செயலகத்திலிருந்து காணொளி வாயிலாக திருமூர்த்திமலையில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தையும், உடுமலை நகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எத்தலப்ப நாயக்கர் முழுவுருவச் சிலையையும் திறந்து வைக்கவுள்ளார்.

மாண்புமிகு முதல்வர் தேர்தல் அறிக்கையில் இராஜகம்பளத்தார் சமுதாயத்திற்கு அளித்த தனிப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதோடு, அவரே நேரடியாகப் பங்கேற்று திறந்து வைக்கவும் உள்ளார். எனவே தமிழகத்தில் வாழும் இராஜகம்பளத்தார் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பிரதான கோரிக்கையான அரசியல் அதிகாரத்தில் கம்பளத்தாருக்கு உரிய அங்கீகாரத்தைப் பெறும் நோக்கோடும், முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து விழாவை வெற்றிபெறச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

திறப்பு விழாவுற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக நிர்வாகிகள் செய்து வரும் நிலையில், விழாவின் வெற்றி மூலம் கம்பளத்தாருக்கான அரசியல் வாய்ப்புகள் பிரகாசமாகும் என்று நம்பப்படுகிறது. கம்பளத்தாருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதோடு, சமுதாயத்தினர் அனைவரும் ஒரணியில் திரண்டு வெற்றிப்பாதைக்கு வழிவகுக்குமாறு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு ethilappa naicker thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்
OPT
OPA

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண