கல்லீரலில் கொழுப்பு படியும் ஃபேட்டி லிவர் நோயை குணப்படுத்துவது எப்படி ? கல்லீரலைக் காப்பது எப்படி? - பாகம்-1
மருத்துவ ஆராய்ச்சிகள் வழி விளக்கம்;
கல்லீரலில் கொழுப்பு படியும் நோயான Fatty Liver இல் இருந்து மீள முடியும்.
இந்த நோய் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்லாமல் நம்மால் தடுக்க முடியும்.
மது அருந்தாதவர்களுக்கு வரும் கல்லீரல் கொழுப்பு படியும் நோய் தான் கல்லீரல் செயலிழப்பு ஏற்படுத்துவதில் முதல் இடம் வகிக்கிறது என்பதை கருத்தில் கொண்டு பின்வரும் ஆலோசனைகளைக் கடைபிடிக்கவும் .
முதல் படி -
நாம் உண்ணும் உணவில் மாவுச்சத்தின் அளவு 300 முதல் 400 கிராம் என்ற அளவில் தினமும் உள்ளது. அதை 50 கிராமிற்கு கீழ் குறையுங்கள்.
எப்படி குறைப்பது?
அதைத்தான் "பேலியோ" உணவு முறை செய்கிறது.
மாவுச்சத்தை குறைப்பதன் மூலம் கல்லீரலில் கொழுப்பு படியும் நோயை சரி செய்ய முடியும் என்று பின்வரும் மருத்துவ ஆராய்ச்சி விவரிக்கிறது.
(https://www.cell.com/cell-metabolism/fulltext/S1550-4131(18)30054-8?_returnURL=https%3A%2F%2Flinkinghub.elsevier.com%2Fretrieve%2Fpii%2FS1550413118300548%3Fshowall%3Dtrue)
மாவுச்சத்தை எப்படிக் குறைப்பது? பேலியோ உணவு முறைக்கு எப்படி மாறுவது?
தானியங்கள் சார்ந்த உணவு முறையில் அதிக மாவுச்சத்து தினமும் சேர்கிறது. மேலும் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் உண்ணும் உணவு முறையில் பசி அடங்குவதில்லை.
காலை - நான்கு முட்டைகள்: மதியம் - காய்கறிகள்: இரவு - மாமிசம், என்று உண்ணும் உணவு முறையில் மாவுச்சத்து 50 கிராமிற்கு கீழ் குறைக்கப்படுகிறது.
குறைக்கப்பட்ட மாவுச்சத்துக்கு பதிலாக கொழுப்பு மற்றும் புரதம் மூலம் கலோரிகள் உண்ணப்படுகின்றன.
புரதம் மற்றும் கொழுப்பு இரண்டும் பசி உணர்வை நன்றாக கட்டுப்படுத்தக்கூடியவை.
இந்த நிலையை "உணவு சார்ந்த கொழுப்பு எரிக்கும் நிலை " Nutritional Ketosis என்று அழைக்கிறோம்.
நம் உணவை மாவுச்சத்து அதிகம் எடுத்து வந்த நிலையில் இருந்து கொழுப்பு சத்து அதிகம் எடுக்கும் நிலைக்கு மாற்றுவது . நமது உடலில் சேர்ந்த கொழுப்பை எரிக்கச்செய்யும்.
உடலில் சேர்ந்த கொழுப்பை உணவில் சேர்க்கும் கொழுப்பைக் கொண்டு எரிக்கும் யுக்தி "கீடோசிஸ்" எனப்படும்.
இந்த கீடோசிஸ் பட்டினியாக கிடந்தாலும் நடக்கும். இதை Starvation Ketosis எனப்படும். சென்ற வருடம், தாய்லாந்து குகை சம்பவத்தில் சில இளம் வயது பாலகர்கள் பல நாட்கள் உணவின்றி தண்ணீர் மட்டும் பருகி உயிர் வாழ்ந்தது இந்த பட்டினியால் ஏற்படுத்தப்பட்ட கீடோசிஸால் தான். இதனால் அவர்கள் உடலில் சேர்ந்த கொழுப்பு எரிக்கப்பட்டு எரிபொருளாக மாறியது.
இதே நிலையை உணவின் மூலம் வரவழைப்பது "நியூட்ரிசனல் கீடோசிஸ்" எனப்படும்.
இந்த நிலையை நாம் அடைய 50 கிராமிற்குள் மாவுச்சத்தை குறைத்தாக வேண்டும். இதை பேலியோ எனும் குறை மாவு உணவு முறை சிறப்பாக செய்யும்.
ஏன் நாங்கள் பேலியோ உணவு முறைக்கு மாற வேண்டும்?
நாங்கள் சாப்பிடும் அளவுகளை குறைத்து சாப்பிட்டால் பத்தாதா?
நான்கு தோசை சாப்பிட்ட இடத்தில் மூன்று தோசை. ஐந்து இட்லி சாப்பிட்டு வந்த இடத்தில் மூன்று இட்லி. ரெண்டு குண்டான் சாதம் சாப்பிட்டு வந்த இடத்தில் ஒன்றரை குண்டான் சாப்பிட்டால் சரியாகாதா?
எங்களுக்கு ஏற்கனவே கொழுப்பு சேருது..
இவரு என்னடான்னா..
கொழுப்பு அதிகம் சாப்ட சொல்றாரு?
என்ன கோளாறு இது? என்று கேட்டால் அதற்கு பதில் இது தான்.
உங்களுக்கு கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் வந்ததற்கு காரணம்..
நீங்கள் கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் உண்பதனால் இல்லை. மாவுச்சத்துள்ள உணவுகளை அதிகம் உண்டதே காரணம்.
அது அதிக தானியமாகவும் இருக்கலாம். அதிக இனிப்பாகவும் இருக்கலாம்.
நாம் உண்ணும் எக்ஸ்ட்ரா மாவுச்சத்து அனைத்தும் கொழுப்பாக மாறி உடலில் சேமிக்கப்படும்.
உடலில் உள்ளுறுப்புகளில் கொழுப்பு சேர்கிறது என்றால் என்ன அர்த்தம்?
நாம் உண்ட மாவுச்சத்தின் அளவுகள் மிதமிஞ்சி உடல் முழுவதும் தொப்பை தொடை என்று சேமிக்கப்பட்டு எஞ்சியது உள்ளுறுப்புகளில் சேமிக்கப்படுகிறது. இதை De Novo Lipogenesis என்று அழைக்கிறோம். இதன் விளைவாக ட்ரைகிளசரைடுகள் எனும் கொழுப்பு , கல்லீரல், கணையம் உள்ளிட்ட அனைத்து உள்ளுறுப்புகளிலும் படிய ஆரம்பிக்கிறது.
இப்படி தவறான வாழ்வியலால் கல்லீரலில் படிந்த கொழுப்பை கரைக்க நாம் பின்வரும் பத்து கட்டளைகளை கடைபிடிக்க முயற்ச்சிக்கலாம்.
1. தானியம் சார்ந்த உணவு முறையில் இருந்து மாறுவது முன்னேற்றம் தரும். மாவுச்சத்து அதிகம் எடுக்கும் உணவு முறை, மாவுச்சத்து அதிகம் எடுத்து அதனுடன் கொழுப்பு அதிகம் எடுக்கும் உணவு முறை போன்றவை கல்லீரல் கொழுப்பு நோயை உருவாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது (https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3930974/)
2. இனிப்பு சுவை தரும் அனைத்தையும் உடனே நிறுத்துவது . சீனி / நாட்டு சர்க்கரை / வெல்லம் / கருப்பட்டி போன்ற அனைத்தும் இனிப்பு சுவை தருபவை என்பதை தான் என்பதை மனதில் கொள்ளவும். குழந்தைகளுக்கு இனிப்பு சுவை குறைந்த / இல்லாத உணவுகளைக் கொடுப்பது அவர்களுக்கு கல்லீரல் கொழுப்பு சேரும் நோய் வராமல் காக்கிறது என்று பின்வரும் ஆய்வு கூறுகிறது. எந்த குழந்தை இருக்கும் வீட்டுக்கும் சீனி கலந்து சர்க்கரை கலந்த பண்டங்களை வாங்கிச்செல்வதை தவிர்த்து விட வேண்டும். நாமும் டீ / காபி / பாலில் இனிப்பு சுவை தரும் விசயங்களை தவிர்ப்பது சிறந்த முடிவு.(https://www.sciencedaily.com/releases/2019/01/190122115003.htm)
3. ஃபேட்டி லிவர் இருப்பவர்கள் இனிப்பு சுவை தரும் பழங்களை தவிர்ப்பது நல்லது. பெரும்பாலும் மக்கள் பழங்களை விரும்புவது அதன் சத்துகளுக்கு என்று கூறப்பட்டாலும், பழங்கள் விரும்பப்படுவது அவற்றின் சுவைக்கே. இன்றோடு ஒரே நாளில் உலகில் கிடைக்கும் அனைத்து பழங்களையும் கசப்பு சுவை உள்ளதாக மாற்றிவிட்டால், பழங்களின் விற்பனை உடனே சரிந்து விடும்.
நாம் அனைவரும் அடிப்படையில் இனிப்பு சுவைக்கு அடிமை என்பதை கருத்தில் கொண்டு, இன்று பயிரிடப்படும் பழங்கள் அனைத்தும் அதிக இனிப்பு சுவையுடன் வருமாறு கலப்பின வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
பழங்களில் உள்ள ஃப்ரக்டோஸ் எனும் மாவுச்சத்தை கல்லீரலால் மட்டுமே ஜீரணிக்க முடியும்.
எனவே இது கல்லீரலுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துகிறது. மேலும் அதிகமாக உண்ணப்படும் ஃப்ரக்டோஸ், கல்லீரலில் அதிக கொழுப்பு சேர்வதை உறுதி செய்கிறது. மூன்றுவேளை உணவாக பழங்களை மட்டும் உண்டு வாழ்வது கல்லீரலுக்கு ஊறு செய்யும் என்பதை பின்வரும் ஆராய்ச்சி விவரிக்கிறது
(https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4405421/)
மேலும், அதிக க்ளூகோஸ் உண்டாக்கும் தானியம் உண்ணும் உணவு முறையில் இருந்து அதிக ஃப்ரக்டோஸ் தரும் பழங்கள் உண்ணும் (Fruitarian) முறைக்கு மாறுவதால் கல்லீரல் நோயில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை பின்வரும் ஆராய்ச்சி விளக்குகிறது.
(https://www.ncbi.nlm.nih.gov/pubmed/23872500)
4. நீங்கள் கார்பனேட்டட் குளிர்பானங்கள் தினமும் குடிப்பவரா? உங்களுக்கு கல்லீரல் நோய் வரும் வாய்ப்பு மிக அதிகம். உடனே குளிர்பானங்களை நிறுத்தவும்.பெரும்பாலும் வெளிநாடுகளில் தினமும் குளிர்பானங்கள் பருகுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதை காண முடிகிறது. தயவு செய்து உடனே குளிர்பானங்களை நிறுத்தவும்.
குளிர்பானங்களால் கல்லீரலுக்கு ஏற்படும் சேதத்தை பின்வரும் ஆராய்ச்சி விளக்குகிறது
(https://www.ncbi.nlm.nih.gov/m/pubmed/26055949/)
Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்,
சிவகங்கை