பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 100. வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1923ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தின் விஸ்நகரில் பிறந்தவர் பிரதமர் மோடியின் அம்மா ஹீராபென் மோடி. பிரதமர் மோடியின் சொந்த ஊருக்கு மிக அருகில் உள்ள ஊர் விஸ்நகர்.
ஹீராபென் மோடி, டீக்கடை நடந்திக்கொண்டிருந்த மோடியின் தகப்பனார் தாமோதர்தாஸ் முல்சந்த் மோடியை மணந்தார்.
சிறுவயதிலேயே ஹீராபென் மோடியின் தாயார் ஸ்பானிய ஃப்ளூ பாதிப்பினால் மரணமடைந்தார். தாயை இழந்ததால் குழந்தைப் பருவம் மிகவும் கடினமானதாக இருந்தது என்று பிரதமர் மோடி நினைவுகூர்ந்திருக்கிறார்.
தாயாரின் மறைவால் மனமுடைந்து போன பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் தலைவர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர். ஆரம்ப காலத்தில் டீக்கடை நடத்தி வந்த மோடி, இன்று அரசியலில் மிகப்பெரிய உயரத்தை எட்டி உள்ளார் என்றால் அதற்கு அவரது தாயார் ஹீராபென்னும் ஒரு முக்கிய காரணம்.
தாயின் மரணத்தை அடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன்.
100வது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க. அதாவது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்பதே. இது எப்போதும் நினைவில் இருக்கிறது" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் அருகே ரேசான் கிராமத்தில் உள்ள தாயாரின் குடியிருப்பில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடி அங்கு வந்தார். தொடர்ந்து, தனது தாயாரின் உடலுக்கு மாலையிட்டு, மரியாதை செய்து அவரை வணங்கினார்.
தொடர்ந்து, பிரதமர் தாயாரின் உடல் இறுதிச்சடங்குக்காக எடுத்துச்செல்லப்பட்டது. அப்போது, வீட்டில் இருந்து உடலை கொண்டு வாகனம் வரை, தனது தாயாரின் உடலை பிரதமர் மோடி தோளில் தூக்கி சென்றார். பின்னர் உடல் ஊர்தியில் வைக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடியும் ஊர்தி தாயாரின் உடலுடன் சென்றார். குஜராத் தலைநகர் காந்திநகரில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அங்கு ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது.
தாயாரை இழந்துவாடும் பிரதமர் மோடிக்கு இராஜகம்பளத்தாரின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.