தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி!
விளம்பரங்கள்
கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு!

கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு!

Admin 21 Jul 2026 | 09:38 PM
பகிர்:

இராஜகம்பள சமுதாய மக்கள் அதிக அளவில் வசித்து வரும் விருதுநகர் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தது, நமது சமுதாயத்தின் முன்னேற்ற வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

ஒருங்கிணைந்த பழைய இராமநாதபுரம் மாவட்டம் (Ramnad District) என்பது இன்றைய இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய மிகப் பெரிய நிர்வாக மாவட்டமாக இருந்தது. இதன் காரணமாக இராஜகம்பள சமுதாய மக்களுக்கும், தலைவர்களுக்கும் பெருந்தலைவர் காமராஜருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இயல்பாகவே கிடைத்தது.

பல கம்பளத்தார் கிராமங்கள் சிறந்த சமூக ஒழுங்குடனும் கட்டுப்பாட்டுடனும் விளங்கியிருந்த போதிலும், அவற்றில் பெரும்பாலான மக்கள் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை காமராஜர் நன்கு அறிந்திருந்தார்.

அதே காலகட்டத்தில் காமராஜரின் அரசியல் எழுச்சியும், தமிழ்நாடு இராஜகம்பள மகாஜன சங்கத்தின் வீரியமான சமூகப் பணிகளும் ஒன்றோடொன்று இணைந்து வளர்ந்தன. கம்பளத்தார்களுக்கு காமராஜரின் ஆதரவு தேவையாக இருந்ததுபோல, அன்றைய அரசியல் சூழலில் காமராஜருக்கும் கம்பளத்தாரின் ஒத்துழைப்பு முக்கியமானதாக இருந்தது. இதன் விளைவாக, சமுதாயத் தலைவர்களுக்கும் காமராஜருக்கும் இடையே நெருக்கமான உறவு உருவானது.

அந்தத் தலைவர்களில் விருதுநகர் கோட்டைப்பட்டியைச் சேர்ந்த கொட்டாப்புளி திரு. குருசாமி நாயக்கர், வழுக்கலொட்டி மைனர் மற்றும் எர்ரகொல்ல ராஜகம்பள சங்கத்தின் நிறுவனரான திரு. பி.எஸ்.எம். பெருமாள் நாயக்கர், அச்சங்கத்தின் பொதுச்செயலாளராகப் பணியாற்றிய அயன் ரெட்டியபட்டி தியாகி திரு. பா. ராமசாமி நாயக்கர், தமிழ்நாடு இராஜகம்பள மகாஜன சங்கத்தின் தலைவராக விளங்கிய மேலமுடிமன்னார் கோட்டை திரு. ஆர். வையப்ப நாயக்கர் மற்றும் சங்கத்தின் முன்னணி தலைவராகப் போற்றப்பட்ட ஏழுமலை நாகமநாயக்கன்பட்டி திரு. ஏ. சீனிகுருசாமி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் அனைவரும் பெருந்தலைவர் காமராஜரின் நெருங்கிய நண்பர்களாகவும், அன்பிற்குரியவர்களாகவும் அறியப்பட்டனர். (ஆதாரம்: காலமெல்லாம் வாழும் கட்டபொம்மன்-க.சுப்பு)

இந்த நல்லுறவை சமூக முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக் கொண்ட சமுதாயத் தலைவர்கள், தொட்டிய நாயக்கர் சமூகத்தின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றம் தொடர்பாக காமராஜரின் ஆதரவைப் பெற்றனர்.

காமராஜர் தமிழக முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், தொட்டிய நாயக்கர் சமூகத்தின் வகைப்பாடு தொடர்பாக முக்கிய நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, 1960-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை மூலம் "Thottai Naicken" என்ற பெயர் "Thottia Naicken" எனத் திருத்தப்பட்டதுடன், இராஜகம்பளம், கொல்லவார், சில்லவார், தோக்கலவார் மற்றும் தொழுவ நாயக்கர் ஆகிய உட்பிரிவுகள் அனைத்தும் "தொட்டிய நாயக்கர்" என்ற ஒரே சமூகப் பெயரின் கீழ் இடம்பெறுவதாக அரசு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தது. இதன் மூலம் தொட்டிய நாயக்கர் சமூகம் தனித்துவமான அரசாங்க அங்கீகாரத்தைப் பெற்றது.


மேலும், 1969-ஆம் ஆண்டு நீதிபதி ஏ.என். சட்டநாதன் தலைமையில் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்படுவதற்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பே, தொட்டிய நாயக்கர் சமூகம் அரசால் தனித்த சமூக வகைப்பாட்டின் கீழ் அங்கீகரிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை, பின்னாளில் தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் விரிவாக்கத்திற்கும், 20 விழுக்காடு தனி இடஒதுக்கீட்டுக் கொள்கை உருவாகுவதற்கும் வழிவகுத்த முன்னோடி நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

"கல்வியே சமூக முன்னேற்றத்தின் திறவுகோல்" என்ற நம்பிக்கையுடன் செயல்பட்ட பெருந்தலைவர் காமராஜர், கம்பளத்தார் கிராமங்களில் பள்ளிகளின் பற்றாக்குறையை உணர்ந்து, பள்ளி வசதி இல்லாத பல கிராமங்களில் ஓராசிரியர் பள்ளிகளைத் தொடங்க உத்தரவிட்டார். அதன் பயனாக விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான கம்பளத்தார் கிராமங்களில் தொடக்கக் கல்வி எளிதில் கிடைக்கும் நிலை உருவானது.

அதுமட்டுமல்லாமல், கம்பளத்தார் மக்களின் பொருளாதார நிலையை நன்கு புரிந்திருந்த காமராஜர், அக்காலத்தில் பள்ளிகளில் கல்வி பயின்ற கம்பளத்து நாயக்கர் மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், தகுதியுள்ள அனைவருக்கும் அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக சமுதாய மூத்தோர்களின் நினைவுக் குறிப்புகளிலும், வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளிலும் குறிப்பிடப்படுகிறது.

பெருந்தலைவர் காமராஜரின் கல்விக் கொள்கைகள், சமூக நீதிக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் இராஜகம்பள சமுதாயத் தலைவர்களுடன் அவர் பேணிய நெருக்கமான உறவு ஆகியவை, அச்சமுதாயத்தின் கல்வி வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றப் பயணத்தில் மறக்க முடியாத அத்தியாயமாக இன்று வரை நினைவுகூரப்படுகின்றன.

கட்டுரையாளர்: திரு.அ.காசிராஜன் M.A.,

குறிச்சொற்கள்

கட்டுரைகள் தமிழ்நாடு kamarajar kasirajan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண